இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்
A People's Movement Against Genocide

Kirishanth. S, Vithai Kuzhumam Activist & member of the editorial board of "Puthiya Sol"
கிரிசாந். சி, விதை குழுமம் செயற்பாட்டாளர், புதிய சொல் ஆசிரியர் குழு அங்கத்தவர்

Photo by Kumanan K

முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஆயுத வழிப்போராட்டமும் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இதன் விளைவுகள் ஆழமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சரியாக மதிப்பிடப்பட்டு அதன் மூலமான சமூக அசைவென்பது நிகழவில்லை. பல்வேறு இழுவிசைகளினாலும் நாட்டின், சர்வதேசத்தின் நிலமைகளினாலும் தமிழ் மக்கள் தம்மைத் தாம் விரும்பிய திசையில் அசைத்துச் செல்வது இன்னமும் முடியாததொன்றாகவே இருக்கிறது. 

சமூக பண்பாட்டு அரசியல் தளங்களில் இடம்பெற்ற மாற்றங்கள், மக்களை குவிமையமாகத் திரள்வதிலிருந்து விலத்தி வருகின்றன. அதே நேரம் அப்படிக் குவிவதன் தேவை தொடர்பிலும் உரையாடப்பட்டு வருகிறது. இந்தப் பத்து வருடத்தில் தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்க வேண்டியது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இனப்படுகொலைக்கு நீதி கோருவதை அதன் மையமான கோரிக்கையாகவும், அதன் விளைவுகளான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், காணிகளை மீட்கும் போராட்டம், அரசியல் கைதிகளை விடுவித்தல், நினைவு கூரும் உரிமை தொடர்பான நிலைப்பாடுகள், போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், அங்கங்களை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், அவர்களுக்கான ஆதரவு என்று இன்னும் ஆழமானதும் விரிவானதுமான பிரச்சினைகள், குறிப்பாக எல்லாவற்றுக்குமாக இல்லையென்றாலும் இனப்படுகொலையினதும் அதன் விளைவுகளை கையாள்வது தொடர்பிலும் நாம் ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்கியிருக்க வேண்டியவர்கள். அதுவே பண்பாட்டு அடிப்படையிலும் நீடித்து நிலைக்கக் கூடிய அடிப்படையிலும் பலன்களை அளிக்கக் கூடியது. 

இதனை முன்வைக்கும் போதே, கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய முயற்சிகள் அல்லது உரையாடல்கள் போன்றவற்றின் அனுபவங்களை உள்வாங்கிப் பார்க்க வேண்டும். இப்படியொரு மக்கள் இயக்கத்தின் அடிப்படைப் பிரச்சினையே இத்தகையதொரு மக்கள் இயக்கத்தை ஒருங்கிணைக்கக் கூடிய ஆளுமையும் அறிவும் கொண்ட, மக்கள் ஏற்பும் உள்ள குழுக்களோ ஜனநாயக இயக்கங்களோ, போதுமான நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஜனநாயக சக்திகள் என்பவர்கள் மக்கள் ஏற்பில்லாமல் ஒரு மக்கள் இயக்கத்தை பேரியக்கமாக உருவாக்க முடியாது. 

Photo by Satkunarasa Pushanthan

உதாரணத்திற்கு, முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் வருடா வருடம் இடம்பெறும் குழப்பங்களை நாம் பார்த்து வருகிறோம். இதைக் குழப்பாதீர்கள் என்று பல்வேறு தரப்பைப் பார்த்தும் சொந்தங்களை இழந்த மக்கள் கதறியழுகின்றனர். போன வருடம் மாணவர்களும் இணைந்து ஒருங்கிணைப்பில் ஈடுப்பட்ட போது ஒப்பீட்டளவில் அழுத்தக் குழுவாகவும் நிகழ்வினை ஒருங்கமைக்கும் மனித வளத்தையும் கொண்ட தரப்பாகவும் மாறினார்கள். இந்த வருடம், மாகணசபை இல்லாத நேரத்தில் மாணவர்கள் தான் முதன்மையான பாத்திரத்தை வகிக்க வேண்டும். இந்த நிகழ்வுகளை மதிப்பிட்டால், அரசியல் தரப்பின் தலைமையோ அல்லது ஒருங்கிணைப்போ நிலையில்லாதது, நம்பிக்கையளிக்கத் தவறிக்கொண்டே இருப்பது. மாணவர்கள் ஒப்பீட்டளவில் இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கக் கூடிய அறிவும், விரிவான மனித வளமும், நிறுவன ரீதியிலான பலமும் கொண்டவர்கள், அதே நேரம் அவர்கள் தனியாக தாம் விரும்பிய பக்கத்தில் இதைக் கொண்டு போகவும் முடியாது. சுயாதீன அமைப்புகள், போராடும் மக்கள் குழுக்கள், அரசியல் தரப்புகள், தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்கும் பிற நேச சக்திகள் என்று கூட்டான ஒரு இயக்க உடலையும், பொதுவான ஒரு நிர்வாக உடலையும் கொண்டு இயங்குவது ஓரளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்று கருதுகிறேன். அதுவே பலமான உடலாகவும் அமையும். 

இரண்டு பிரச்சினைகளை நாம் இங்கே கவனத்திலெடுக்க வேண்டும். 

  1. மாணவர்கள் அரசியல் அடிப்படையில் அறிவூட்டப்படல், அதற்கான பொது உரையாடல் களங்களை பல்கலைக்கழகத்திற்குள் திறத்தல். 
  2. மாணவர்கள் கொள்கையளவிலும் நடைமுறையிலும் செயல்வாதத்தில் ஈடுபட்டு பிரச்சினைகளின் போது முடிவுகளை எடுப்பதில் இன்னும் ஆழமாக வேண்டும். 

இதனைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். மாணவர்கள் அரசியல் ரீதியிலான செயல்பாடுகளைச் செய்தாலும் அது சடங்கான நிகழ்வுகளாகத் தொடர்கின்றதே தவிர, அவை ஒரு அறிவு பூர்வமானதும் மக்களை அறிவூட்டவும் வழிநடத்தவும் ஒருங்கிணைக்கவும் கூடியதுமான தரப்பாக வளர முடியவில்லை. இதற்கான அடிப்படை பல்கலைக்கழகத்திற்குள், அரசியல் தடை தான். மாணவர்கள் அரசியல் ரீதியாக திரள்வதிலும் இயங்குவதிலும் அக்கறையின்றி இருக்கிறார்கள். இந்த அக்கறையின்மை கவலையளிப்பது. அறிவு ரீதியில் தயாராகாத மாணவர்கள் ஒருங்கிணைப்பில் ஈடுபடுவதும் ஆபத்தானது. அரசியல் கட்சிகளோ வேறு குழுக்களோ அவர்களை கையாளும் நிலமைகள் உண்டாகலாம். அறிவு ரீதியிலும் ஆளுமை அடிப்படையிலும் தயாராகும் மாணவர் தரப்பே இதனைச் செய்யப் பொருத்தமானவர்கள். அதற்கான  உரையாடல்களை பல்கலைக்கழகத்திற்குள் தொடர்ந்தும் நடாத்த வேண்டும். 

Photo by Satkunarasa Pushanthan

பகுதியளவில் அவ்வப்போது ஒருங்கிணைக்கப்படும் அரசியல் ரீதியிலான கலந்துரையாடல்களுக்கு அப்பாற்பட்டு, மாணவர்கள் சமூக அரசியல் அடிப்படையிலான அவர்களின் பிரச்சினைகளை முன்கொண்டு வந்து அவற்றை விவாதிப்பதில்லை. உதாரணத்திற்கு மாணவர் தலைவர்களில் அனேகமானவர்கள் அல்லது அத்தனை பேருமே ஆண்கள், அவர்கள் ஒரு ஆணாதிக்க ஒழுங்கை கடைப்பிடிப்பார்கள், தலைவர்களில் பெரும்பாலானோர் வடக்கைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு மலையக மக்களின் பிரச்சினை முக்கியமானதில்லை, சாதிய மதவாத நடைமுறைகள் தொடர்பில் மாணவர் ஒன்றியம் சிந்திப்பதில்லை, நிலைப்பாடு எடுப்பதில்லை. தாம் பேசிக்கொண்டிருக்கும் கருத்தியல் கோஷங்களுக்கே கூட பெரும்பாலான நேரத்தில் அவர்களுக்கு அர்த்தம் பிடிபடுவதில்லை. இது ஒரு கோதுஅதன் உள்ளிடன், கருத்தியலாலும் செயல்வாதத்தினாலும் பலம் பெற வேண்டும்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகம் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடிய பல்கலைக் கழகமென்று நான் கருதுவது ஜவஹர்லால் நேரு  பல்கலைக் கழகத்தை . உதாரணத்திற்கு ரோஹித் வெமுலாவின் மரணத்தை தேசிய பேசுபொருளாக்கி அவர்கள் சிலவாராம் நடாத்திய போராட்டங்கள் அற்புதமானவை . அந்த வழிமுறைகள் அவர்கள் போராடியபோது இருந்த ஒற்றுமை ஒரு நாளில் வந்ததில்லை . அது ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட பல்கலைக் கழகம் , அங்கே அரசியல் பேசலாம், அவர்கள் ” புரட்சி ஓங்குக ” என்பதை சொல்வதற்குப் பின்னலொரு வாழ்க்கை இருக்கிறது, அரசியல் சித்தாந்தம் இருக்கிறது. தொடர்ச்சி இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரலாயிருக்கிறார்கள். நாம் நமது வீட்டிற்குள் வரும் பிரச்சினைகளுக்கே பெரும்பாலும் குரலாயிருக்கிறோம். அவர்கள் போடுவது வெறும் கோஷமல்ல. அவர்கள் அதை வாழ்கிறார்கள் . நம்மைப் போல படித்து முடித்ததும் வெளிநாட்டுக்கோ அல்லது வேலையில் அமர்ந்து கொண்டு பேப்பரில் வரும் அரசியல்களைப் பற்றி அரட்டை அடிப்பது மட்டுமல்ல அவர்கள் செய்வது . அவர்கள் இந்திய வல்லரசை எதிர்க்குமளவு வளர்ந்ததற்கு வெறும் கோஷம் காரணமல்ல , அவர்களின் உரையாடல்களும் செயற்பாடுகளும் தான்அவர்களை மாற்றியது. கன்னையா குமார், ஷீலா ராஷிட் போன்ற மாணவர் தலைவர்கள் இன்று அரசியல் அரங்கில் நம்பிக்கையளிக்கும் சக்திகளாக மாறியிருக்கின்றனர், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த கன்னையா குமார் இன்று இந்தியாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் இளம் அரசியல் குரல்களில் முக்கியமானவர், ஷீலா ராஷிட், காஷ்மீரிய உரிமைகளுக்காகப் பேசும் பெண் தலைவர், இவர்களெல்லாம் ஒரே பல்கலைக்கழகத்தில், விவாதித்து போராடி தம்மை தமது மக்களின் குரலாக மாற்றியிருக்கின்றனர், அப்படிப்பட்ட ஆளுமைகள் ஒவ்வொரு சமூகத்தினதும் மூலதனம், அதுவொரு அறிவு மூலதனம். எங்களுக்கு அப்படிப்பட்ட தலைவர்கள் தேவை. 

மாணவர்கள் மேற்சொன்ன அறிவு ரீதியில் தயாராகும் அதே நேரம் மக்கள் இயக்கமொன்றினை கொள்கையளவில் வகுத்து, குறுகிய நலன்களுக்குள்ளும் பார்வைகளுக்குள்ளும் சிக்காது, வேறு இடங்களில் போராடும் மக்கள் இயக்கங்களை வரலாற்றின் அடிப்படையிலும் தமிழ்மக்களினது பிரச்சினைகளின் அடிப்படையிலும் இணைத்து விளங்கிக் கொள்ள வேண்டும். 

இதே நேரத்தில், தமது குறுகிய அரசியல் நலன்களுக்காகவும், கட்சிகளின் பெயருக்காகவும், சில NGO க்களின் வேலைத்திட்டங்களிற்காகவும் மக்களை தொடர்ந்தும் அலைக்கழிக்கும் இந்த அவலத்திலிருந்து மக்களை மீட்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. உதாரணத்திற்கு, வவுனியாவில் இரண்டு வருடங்களிற்கு முன் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு, அவர்களின் உறவினர்களால் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்களில் அது கவனத்தைக் கோரும் மக்கள் பங்கேற்பு அதிகரித்த போராட்டமாக வலுப்பெறத் தொடங்கிய போது, அதனை ஒழுங்கு செய்த தரப்புக்களில் வலிமையாக இருந்த ஒரு கட்சியின் முடிவினால் ஒரு அமைச்சரின் சந்திப்புடன் உடனடியாக நிறைவுக்கு வந்தது. அந்தப் போராட்டத்தின் போது மாணவர் தலைவர் ஒருவர் பேசியது இன்னமும் காதிற்குள்ளேயே ஒலிக்கிறது, ” அமிர்தலிங்கம் அய்யாவுக்கு அடுத்தது சம்பந்தன் அய்யா தான் ” என்று மக்களின் முன் கட்சியுரை ஆற்றினார். ஏற்கெனவே நொந்து போயிருந்த மக்களில் பலர் வேறு பக்கத்தில் முகத்தைத் திருப்பி, இலக்கற்றுப் பார்த்தனர். இன்று வரை அந்தப் பந்தல் அங்கேயே இருக்கிறது. மக்கள் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். அரசியல் அடிப்படையில் பண்படுத்தப்படாத மக்களோ மாணவர்களோ, பலவீனமானவர்கள், அவர்களை பலமான தரப்புகள் பயன்படுத்தும். 

அதே நேரம், இந்தப் போராட்டம் முடிவடைந்து ஒரு சில நாட்களில் தொடங்கிய கேப்பாப்புலவில் உள்ள பிலக்குடியிருப்பு மக்களின் காணிவிடுவிப்புப் போராட்டம் ஒரு அசலான மக்கள் போராட்டம். பெண்கள் தலைமையேற்ற அந்தப் போராட்டம், அவர்களின் கோரிக்கையின் நியாயத்தினாலும் உறுதியினாலும் வென்றது. அதுவொரு மகத்தான உதாரணம். அந்த மக்கள் வழிகாட்டிகள், அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. கோரிக்கைத் தெளிவு, போராட்ட ஒருங்கிணைப்பு, தங்களது நேச சக்திகளை எப்படி ஒன்றாக்குவது, இடைவிடாது போராடுவது, உரையாடலுக்கான அழைப்பைப் பயன்படுத்துவது, போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்துவது, தங்களுக்குள் வேறுபாடுகள், கருத்தொருமிப்புப் பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம், பொதுக் கோரிக்கையின் பொருட்டு, ஒன்றாக நிற்றல், தங்களிடம் வரும் அனைவரையும் தங்கள் குரலாக மாற்றுதல், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு தாங்கள் போராடுவது தங்களின் வாழ்வுரிமைக்காக என்ற தெளிவிருந்தது. நம் சமகாலத்தில் நிகழ்ந்த முக்கியமான மக்கள் போராட்டம் அது.

இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். போராடத் தயாராவதென்பது, போராடக் கற்றுக்கொள்வதிலிருந்து மட்டும் தோன்றாது, எதற்காகப் போராடுகிறோம் என்ற அடிப்படையே போராட்டத்தின் மூலவிசை.

இறுதியாக, இனப்படுகொலைக்கெதிரான மக்கள் இயக்கமென்பது ஒரு கூட்டுச் செயல்பாடு, ஆனால் பிரதான பாத்திரம் மாணவர்களும் மக்களும் தான். பிற அமைப்புக்களிலிருந்தும் அவற்றின் செயல்வாதத்திலிருந்தும் திரண்ட அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி பொதுக் குடையின் கீழ் திரள்வதே நாம் கரிசனை கொள்ளக் கூடிய நடைமுறைச் சாத்தியமான வடிவம். 

-கிரிசாந் சிவசுப்பிரமணியம்