முள்ளிவாய்க்கால் - போராட்ட அரசியலுக்கான சொல்
Mullivaaikkaal - Word of Political Struggle

Yogesh Jo, Socialist/Social Activist
யோகேஷ் ஜோ, சமூகவியலாளர்/சமூக செயற்பாட்டாளர்

முள்ளிவாய்க்கால் – போராட்ட அரசியலுக்கான சொல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இந்த வருடத்துடன் பத்து ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்த பத்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த மேம்பாடுகள் எவ்வாறு இருக்கிறன என்பதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எந்தவிடயத்தை எமக்குப் பதிவுசெய்து போயிருக்கிறது என்பதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்பாக தமிழ் மக்களின் வாழ்வியலில் அல்லது தமிழ்மக்களின் அரசியற் பரப்பில் ஏற்பட்ட சாதகமான பாதகமான விடயங்களையும் ஆராய்வது அவசியம். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது அல்லது முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ்மக்களைப் பொறுத்தவரை தமிழ்பேசும் சமூகத்திற்குப் பெருங்காயமாக இருந்து வருகின்றது. பொதுவில் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரசியல்வாதிகளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவேந்தல் செய்ய வேண்டியவர்களும் தமது நிலைப்பாட்டில் இருந்துகொண்டு இதனை ஒரு நினைவேந்தலாகவே மட்டும் பார்த்து வருகிறார்கள். ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்ததற்குப் பின்னரான இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தனியே ஒரு நினைவேந்தலாக மட்டும் இருக்காமல் மக்கள் கிளர்ச்சிக்கான எழுச்சி நிகழ்வாகவும் பதியப்படவும் கடைப்பிடிக்கப்படவும் வேண்டும்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் திரட்சிக்கான பொதுவான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவேண்டும் என்கின்றவொரு நிலைப்பாட்டில் ஒரு இளையோர் குழுமமாக நாங்கள் இருக்கின்றோம். ஏனென்றால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்கின்ற விடயம் தனியே மக்களின் உயிர்களை மட்டும் காவுகொண்ட விடயமல்ல. அது ஒரு சமூகத்தினுடைய வாழ்வியல் ரீதியான விடயங்கள் அனைத்தையும் புரட்டிப்போட்ட ஒரு விடயம். இதற்குள் எமது மொழி, கலை, கலாசாரப்பண்புகள் உள்ளடங்கலாக எமது சமூகத்திற்குரிய பொருளாதார மேம்பாடுகள் குறித்த அனைத்தையும் நாங்கள் இழந்துவிட்ட ஒரு இடமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதனைவிட விடுதலை அரசியலுக்கான அல்லது எங்களது உரிமைப்போராட்டத்திற்கான மிகப்பெரிய குரலாக இருந்த ஒரு அமைப்பின் சார்பாக இயங்கிய அல்லது திரட்சி கொண்;ட மக்கள் குழுமத்தை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

அது மட்டுமல்லாது, இந்தப்பத்து வருடங்களில் சகல வழிகளிலும் அதிகாரத்தை இழந்து நிற்கின்ற தமிழ்பேசும் சமூகத்தினராகிய நாம் இந்த அதிகாரத்தை எவ்வாறு கட்டி நிமிர்த்துவது, அல்லது எவ்வாறு நாங்கள் அதனை மீளமைப்பது என்பது குறித்தான கலந்துரையாடல்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுகின்ற ஒரு சிலரால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் கூட அது மக்களிடம் எந்தளவிற்குச் சென்று சேர்ந்திருக்கின்றது என்பது கேள்விக்குறியே. சாதாரணமாக இன்று அரசியல் பக்கம் இருந்து தமது வலதுசாரிய அரசியலை முன்னெடுக்கின்ற தரத்திற்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்த வகையில் மக்களின் அதிகாரங்களை மக்களை எவ்வாறு கட்டிக்காப்பது என்ற கலந்துரையாடலைச் செய்வதற்கு இந்த முள்ளிவாய்க்கால் சார்ந்த நினைவேந்தலை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்தாக இருக்கிறது.

இன்று இந்தப்பத்து வருடங்கள் கடந்த நிலையில் மக்கள் பல்வேறுபட்ட கோரிக்கைகளை வைத்துப் போராடிவருகிறார்கள். முன்வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கைள் அனைத்தும் எம் சமூகத்திற்கிருக்கின்ற சமூகப்பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகளைச் சார்ந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்குப் பின்னே உள்ள அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் நாங்கள் ஆராய வேண்டியுள்ளது. அந்தவகையில் மக்கள் முன்வைக்கின்ற பிரச்சினைகளாக நாங்கள் பார்;கின்ற விடயங்களில் ஒன்றாக, தொடரும் வடக்குக் கிழக்குத் தழுவிய இராணுவப்பிரசன்னம் உள்ளது. அந்த பிரசன்னத்திற்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளினை மக்கள் மீளவும் மக்களிடம் ஒப்படைக்கக்கேட்டு கேட்டுப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அடுத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மீண்டும் அரசியல் கைதிகள் என்ற போர்வையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமல்; அவர்களின் விடுதலைகள் பற்றிய எந்தவொரு கருத்துக்களும் முன்வைக்கப்படாமல் இருக்கின்ற அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கேள்விகளையும் போராட்டங்களையும் மக்கள் முன்னெடுக்கின்றார்கள். அதுமட்டுமல்லாது தங்களது அன்புக்குரியவர்களை இராணுவத்தினரிடம் இறுதிநேரம் கையளித்து பின்னர் அவர்களை காணாமற் போனோர் பட்டியலில் சேர்த்தோரும், இப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பான விளக்கம் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் விட இன்று என்றுமில்லாதவாறு சமூகப்பாதுகாப்பு மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. அது தொடர்பாக பெண்கள் பல கவனயீர்ப்புப் போராட்டங்களையும் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளில் நுண்நிதிக்கடன்தொடர்பான விடயங்கள் மிகவும் முக்கிய இடத்தைக்கொண்டுள்ளது. இது ஒரு சமூகப்பிரச்சனையாக மட்டுமின்றி தமிழ் மக்களின் பொருளாதாக்கட்டமைப்பைத் தட்டிப்பார்க்கின்ற அல்லது வலுவிழக்கச்செய்கின்ற பாரிய பிரச்சினையாகவும் நாங்கள் இதைப்பார்க்கின்றோம். இதற்குப்பின்னாலுள்ள அரசியல் நிலை என்னவென்பதையும் ஆராய வேண்டியுள்ளது. இதனோடு கூட மக்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளில் மிகவூம் முக்கியமான ஓர் விடயம் இன்று தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லுகின்ற உதாரணமாக ஆடைத்தொழிற்சாலையில் வேலைசெய்கின்ற பெண்கள் ஆண்கள் உட்பட இளஞ்சமூகம் எதிர்நோக்குகின்ற உடலியல் மற்றும் உளவியல் ரீதியிலான மற்றும் தொழிலாளர் அடிப்படை உரிமைகளை மீறுகின்றதொரு விடயம் இந்தப்பத்து ஆண்டுகளில் மிக முக்கிய ஒரு சமூகப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை நாங்கள் பார்க்கின்றோம். ஆக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்பாக வீட்டு வன்முறைகளும் வடக்கு கிழக்குத்தழுவிய சாதியப்பிரச்சினைகளும் 2009 ற்குப்பின்பாக அல்லது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்பாக அதிகரித்த ஒரு தன்மை காணப்படுகின்றது.

அதனையும் விட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்பாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த பெண்களினுடைய திருமண வயது எல்லைகள் அதிகரிக்கப்படுகின்றமை, பெண் தலைமை தாங்குகின்ற குடும்பங்கள் நோக்குகின்ற பிரச்சினைகள் என்று பல்வேறு பட்டியலினை நாங்கள் அடுக்கிக்கொண்டேபோகலாம். இதில் இந்தப்பத்து வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பது உண்மையில் ஒன்றும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அரசின் கடமை என்கின்ற அடிப்படையில் ஏனைய நாடுகளின் உதவியுடனும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து தமிழ்மக்களினுடைய அபிலாசைகளைத்துறக்க வைத்து அவர்களைக்கொலை செய்வதில் மாத்திரம் கவனத்தைச் செலுத்தி தங்களது இலக்கினை அடைந்திருந்தார்கள் என்பது தான் இந்த 2009 யூத்தத்தினுடைய வெற்றி அல்லது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று சொல்லவேண்டும். இதற்குப் பின்பாக வந்திருக்கக்கூடிய சமூகப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அல்லது குறிப்பாக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் அவர்கள் தோல்வியினைத்தான் சந்தித்திருக்கின்றார்கள்.

மக்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளில் மிக முக்கியமான பிரச்சினையான நுண்நிதிக்கடன் காணப்படுகிறது. பங்;களாதேஸ் மற்றும் நேபாளத்தில் மிகவும் படு மோசமான நிலையில் தோல்வியைக்கண்ட இந்த நுண்நிதிக்கடன் முறைமையினை அப்போதைய மகிந்த ராஜாபக்ச, கோதாபாய ராஜபக்ச அரசாங்கம் யுத்தம் முடிவுற்றதும் தமிழர் பகுதிகளில் இவ்வாறான நுண்நிதிக்கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் விளைவு தமிழ் மக்கள் தமது உரிமைகள் தொடர்பாகச் சிந்திக்க விடாமல் அவர்கலுக்குக் கடன்களை வழங்குவதன் மூலம் அவர்கள் அதிக வட்டியினைச் செலுத்த வேண்டும் என்பதும் அவர்களது சுயதேவைப்பொருளாதாரம் சிதைக்கப்படுகின்ற ஒரு நிலைமையை ஏற்படுத்தி எப்பொழுதுமே அந்தக்கடனை மீPளச்செலுத்துவது பற்றியே மாத்திரம் கவனம் செலுத்துவதும் மற்றும் அவர்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓடிக்கொண்டிருப்பதுமேயாகும். இதன்காரணமாக அவர்கள்; ஒரு வகையில் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்;பட்டு பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதனால் இந்த இடைவெளிக்குள் வடக்குக் கிழக்குத் தழுவி தங்களினுடைய சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது தங்களினுடைய ஆளுகைக்குக் கீழாகவே அவர்கள் இருப்பார்கள் என்ற மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் ஒருங்கிணைந்த ரீதியான நுண்நிதிக்கடன்களை வழங்குவதற்குப் பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கு அனுமதிகளை வழங்கி வடக்குக் கிழக்கில் இறக்கி விடப்படுகின்றமையானது தமிழ் பேசும் சமூகத்தினுடைய சுய சார்புப் பொருளாதாரத்தை சிதைப்பது மட்டுமல்லாது இனத்தின் சார்பாகச் சிந்திக்க்கூடிய பண்பாட்டு விழுமியங்களைக்கூட முடக்கி வைத்திருப்பதற்கு இந்த நுண்நிதிக்கடன் பாரிய பங்காற்றி வருகின்றது. இதனால் மக்களின் போராட்டங்கள், உரிமை சார் போராட்டங்கள், மக்களின் அபிலாசைகள் உள்ளடங்கலான வேண்டுதல்கள் நிராகரிக்கப்படுகின்றதொரு அடக்கு முறைகளுக்குள்ளாக இந்த நுண்நிதிக்கடன் தாக்கம் செலுத்தி இருக்கின்றது.

நுண்நிதிக்கடனை வைத்து ஒரு சிலர் மாத்திரம்தான் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும். அதாவது நுண்நிதிக்கடன்களை வழங்குகின்ற நிறுவனங்கள் அவர்களில் தங்கியிருக்கின்ற அலுவலர்கள் சார்ந்தே நன்மையடைய முடியும். அடித்தட்டு மக்கள் அது சார்ந்;து நன்மையடைய மாட்டார்கள் ஏனென்றால் அந்தச் செலவுகளைத் தங்கள் சுயதேவைக்காகவோ அல்லது வேறு தேவைக்காகவோ வீட்டுக்குப்பொருட்கள் வாங்கவோ செலவழித்துவிட்டால் மீளச்செலுத்துவதற்கு இவர்கள் கஸ்டப்படவேண்டும் அவர்கள் சிந்திப்பதற்கு நேரம் கிடைக்காது சமுதாயம் சார்ந்து இயங்குவதற்கு நேரம் கிடைக்காது. சரியான கலந்;துரையாடல் செய்வதற்கு நேரம் கிடைக்காது. பணத்தை மீளச்செலுத்துவதொன்றே குறியாகிப் போக அதுவே தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் போன்றவைகளுக்குக் காரணமாக அமைவதை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக கடந்தகாலங்களில் அறிந்து கொண்டிருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாது இன்று மக்கள் மத்தியில் மக்களினது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புகின்றோம் என்று வேலை செய்கின்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் அவர்களினுடைய செயற்பாடுகள் குறித்தும் நாங்கள் இன்று பேசவேண்டும் ஏனென்றால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்றதன் பின்பாக இடம்பெற்றிருக்கக்கூடிய வாழ்வாதார முயற்சிகளில் பங்களிகக்கூடிய அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பென்பது கணிசமான அளவு. ஆனாலும் அவர்களால் ஒரு நிலை தாண்டி ஏன் அடைய முடியாமல் போயிருக்கிறது என்றால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதியில் பெரும்பாலான நிதி அவர்களின் நிர்வாகச் செலவுக்கே போய்விடுகின்றது. ஆக மிஞ்சுகின்ற சிறிய நிதியில் ஒரு அபிவிருத்தி சார்ந்த விடயங்களைச் செய்ய முடியாது. அதனால்தான் இந்தத்திட்டங்கள் அனைத்துமே தோல்வியடைந்த நிலையில் இருக்கின்றது.

ஆக இந்தச்சூழ்நிலையில் தமிழ் மக்களினுடைய சமூகப் பிரச்சினைகளை, பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ்த் தலைமைகள் என்று சொல்லிக்கொள்வோர் யாருமே முன்வரவில்லை என்பது இன்றுவரை இந்தப்பத்து வருடங்கள் வரை இடம்பெற்ற உண்மையானதும் மிகவும் வேதனைக்குரியதுமான விடயமாகவும் காணப்படுகின்றது. தமிழ்த்தலைமைகள், தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் நாங்கள்தான் என்று சொல்லிக் கொள்கின்ற யாருமே தமிழ் மக்களினுடைய சமூகப்பிரச்சினைகள் சார்ந்து, தமிழ் மக்களினுடைய உரிமைகள் சார்ந்து, அவர்களினுடைய பொருளாதாரப்பிரச்சினைகள் சார்ந்து, குரல்கொடுப்பதற்கு மட்டுமன்றி எந்தவிதமான மக்கள் போராட்டத்தையும் முன்னின்று செய்வதற்கும் முன்வரவில்லை. ஏனெனில் அவர்களது அரசியல் நிகழ்ச்சிநிரலில் ஒரு வலது சாரிய அரசிலுக்குப் பின்பாக இருந்து தங்களை வளர்த்துக்கொள்ளவே முற்படுகிறார்கள். இதனால் மக்களே தமது தமது உரிமைக்கான போரட்டங்களை நடத்திவருகின்றமை இந்தப்பத்து ஆண்டுகளில் எமக்குக் கிடைத்த கண்கூடான ஒரு அனுபவமும் அதுமட்டுமல்லாது சிங்களப்பேரினவாத அரசின்; அடக்குமுறைக்கு உள்ளாகும் தமிழ்மக்களின் பலமுமாகும். பலவீனம் என்பது தமிழ்த்தலைமைகள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களின் சுயநலப் போக்குகளினாலும், குழு நிலையாக கலந்துரயாடல்களினாலும், அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற செயற்பாடுகளினாலும், மக்களின் உரிமைக்கான போராட்டங்களை மேலும் சிறுமைப்படுத்துவதுமாகும்.

இந்தப்பத்து ஆண்டுகளில் பல்வேறுபட்ட வகையில் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர், அல்லது மக்களுக்காக வேலை செய்கிறோம் என்று சொல்லிக்கொள்வோர், மக்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தருவோம் என்று சொல்லிக்கொள்வோர், இந்தப்பத்து ஆண்டுகளில் சாதித்தது என்ன என்;பதுதான் இளையோராகிய அல்லது பொதுமக்கள் சார்பிலான எங்களினுடைய கேள்வி. தீர்வூ எங்கு இருந்து வரும்? இலங்கையிலிருந்து தீர்வூ கிடைக்குமா? அல்லது இந்தியாவிடமிருந்து தீர்வூ கிடக்குமா? மேற்குலக நாடுகளிடமிருந்து தீர்வூகள் கிடைக்குமா? ஐக்கிய நாடுகள் சபையினுடைய தகவல்மையமாக இருக்கின்ற அல்லது ஆவணப்பகுதி மையமாக இருக்கின்ற ஜெனீவாவில் இருந்து தீர்வூ கிடைக்குமா? என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளைக் கடந்த காலங்களில் எழுப்பியிருந்தோம். முப்பது ஆண்டு காலமாகப் போராடி வருகின்ற தமிழ் மக்களிடைய போராட்டத்திற்கு தெற்கினுடைய மனோநிலையில் அல்லது தெற்கு அரசாங்கத்தின் பண்புகளில் மாற்றம்; ஏற்படாமல் தழிழ் மக்களினுடைய உரிமைகள் கலந்த அந்த விடுதலைப்போராட்டத்திற்கு தீர்வூ கிடைக்காது என்பது முன்பாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் அதற்குப்பின்பாகவும் இலங்கை அரசாங்கத்தை நம்பி அவர்கள் தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்பதை இன்றைய தமிழ் தலைமைகள் நம்பலாமா?

என்னைப் பொறுத்தவரையில் இலங்கையென்பது தற்போதைக்கு ஒரு இறைமையற்ற நாடாகவே காணப்படுகிறது. தங்களினுடைய தேர்தல் வெற்றிகளுக்காக ஒவ்வொரு இனக்குழுமங்களையும் பொதுவான எதிரிகளாக்கி செயற்பட்டு வருகின்ற தெற்கு அதிகார வர்க்கத்துக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் முண்டு கொடுக்கின்ற நிலைமையினையே இந்தியா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும். தங்களினுடைய பிராந்திய நலன்களை முன்வைத்துத்தான் அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்;; செயற்படுவார்கள். ஆக மூன்று மில்லியன் முப்பது இலட்சம் மக்கள் தொகையைக்கொண்ட சிறிய நிலப்பரப்பின் உரிமைகளை அவர்கள் பெறற்றுத்தருவார்கள் என்று பகல் கனவு காண்பது பொருத்தமானதல்ல. அப்படியென்றால் நாங்கள் என்ன செய்துவிடமுடியும் எமது உரிமைகளை நாங்கள் வென்றெடுப்பதற்கு? நாங்கள் மக்களைக் கொண்டு ஒரு பலமான திரட்சியை ஏற்படுத்தாத வரையில், மக்கள் போராட்டம் வலுவடையாத வரையில், தமிழ் மக்களினுடைய சமூகப்பொருளாதார அரசியல் ரீதியிலான மேம்பாடுகள் என்பது மிகவூம் பலவீனமானதாக இருக்கும். நாங்கள் அனைத்துவிதமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒரு சுயாதீனமான ஒருபோராட்ட சக்தியினை மக்களிடமிருந்து கட்டி எழுப்ப வேண்டும். அப்போது மட்டுமே இந்த உரிமையை மையப்படுத்திய போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பது பத்து ஆண்டு கால சாதக பாதக விடயங்களை ஆராய்ந்தபோது எனக்குக் கிடைத்த பதிலாக இருக்கின்றது.

-யோகேஷ் ஜோ

சமூகவியலாளர்/சமூக செயற்பாட்டாளர்