மறவாத கண்ணீர் நினைவுகள்
Unforgettable Memories of Tears

Suganthini. T, Human Rights activist & member of the Families of the Disappeared, Killinochchi
சுகந்தினி. தெ, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்க அங்கத்தவர்

Photo from the author’s personal archives – taken during last phase of armed conflict. (Author present on lorry carrying black bag)

மறவாத கண்ணீர் நினைவுகள் 

ஊர் எல்லாம் வெடிச்சத்தம். குண்டுகள் விழுந்து வெடிக்கும் சத்தங்கள். சுப்பர்சொனிக். வேவு விமானம். இரவுகளில் அமைதியான நேரம் பரா வெளிச்சம் போட்டு குண்டு மழை பொழியும் கிபிர் விமானங்கள்.  நிம்மதியான உறக்கமற்ற வாழ்க்கை. நேரகாலமின்றி தமிழர் குடிமனைகளின் மேல் தாக்குதல். பாடசாலை, வேலைத்தளங்கள், வீடுகள் என எல்லோரும் பதுங்குகுழியில். எல்லோர் மத்தியிலும் மரணபயம். என்ன நேரத்தில் யாருக்கு, என்ன, எப்பிடி நடக்கும் என்ற சிந்தனைக் குழப்பத்துடன் நமது வாழ்க்கை.

கிளிநொச்சியிலும் ஷெல் மழை தொடங்கியது. நாங்களும் 2008ம் ஆண்டு இடம் பெயர்வுக்குத் தயாராகி வாகனம் தேடிக்களைத்து விட்டோம். ஒரு போராளி அண்ணாவின் உதவியுடன் ஒருவாறு கண்டாவளையில் எமது பொருட்களுடன் குடியமர்ந்து 25 நாட்கள் கூட இல்லை. மீண்டும் குண்டு மழைத்தாக்குதல். கண்டாவளையில் இருந்து தர்மபுரம் சென்றோம். ஒரு சில நாட்களே அங்கே வாழ்ந்தபோது காலை 9 மணிபோல் ஷெல்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கூவும் சத்தம். நாம் இருக்கும் இடத்தில்தான் விழும் என்ற நினைப்பும் குண்டுகளின் விசிறிகள் சுழலும் சத்தத்திலும் எம் உயிரே எம்மிடம் இல்லாத பயங்கர உணர்வு. எனது அண்ணாவிற்கு நான்கும் சின்னப் பிள்ளைகள். எல்லோரும் வீதி வழியாகச் செல்கிறோம்.  ஒரே அழுகுரல்கள். காயப்பட்ட நிலையில் விடுதலைப்புலிகள் தம்மையும் பார்க்காமல் மக்களை ஏற்றுவதில் கவனமாக இருந்தார்கள். ஒருவாறு மூங்கிலாறு சென்று அங்கே இருந்தோம். அண்ணாவின் நண்பர் ஒருவரின் மனைவியும் பெண்  பிள்ளைகளும் அன்றைய n~ல் வீச்சில் இறந்ததைக் கேட்டதும் நெஞ்சு  கனத்தது.  நாம் எத்தனை உறவுகளைத்தான் இன்னும்  இழக்கப்போகிறோம் என்ற பெருமூச்சுடன் இருந்தோம். எல்லா மக்களும் புலம்பினார்கள். இங்கே எத்தனை நாள்  இன்னும் வாழப்போகிறோம் என்று பேசிக்கொண்டே கலைந்து சென்றார்கள்.

மீண்டும் மூங்கிலாறில் இருந்து இருட்டுமடு. இருட்டுமடுவில் எனது குடும்பத்தை விட்டு நான் வெளியில் வந்து விட்டேன். அங்கும் விமானத் தாக்குதல் நடக்க சுதந்திரபுரம், தேவிபுரம் தாண்டி இரணைப் பாலைக்குள் எனது குடும்பத்தினர் சென்றுவிட்டனர்.  நான் மீண்டும் வந்தபோது குண்டுகளுக்கு நடுவில் படுத்துப்பதுங்கி  நாதியற்று என் குடும்பத்தைத் தேடி ஒருவாறு அவர்கள் இரணைப்பாலையில்  இருப்பதாகத் தகவல் அறிந்தேன்.

என்னைக்கண்டதும் அவர்கள்  ஓலமிட்டு அழுதார்கள். பங்கருக்குள் இருந்த அண்ணாவின் பிள்ளைகள் என்னைக் கண்டதும்  நிறையத் தூரம் நடந்து கால்கள் நோவதாகச் சொன்னார்கள். 5 வயதான மருமகள் தனக்கு கோவா சமைத்துத் தரும்படி கேட்டாள். நான் எங்கபோய் கோவா வாங்குவேன்வெங்காயத்தாள்தான் அதிகம்  விற்பார்கள். மீனும் பருப்பும்தான் எமது கறிகள். சிறுவர்கள் வேறு உணவுகள் கேட்டால் பிறகு வாங்கலாம் என்று சொல்லிச்சமாளிப்போம்.

இன அழிப்பிற்குப் பயந்து பிஞ்சுக் குழந்தைகளுக்காக பதுங்குகுழிகள் ஆழமாக அமைத்தால் தண்ணீர் மேல் நோக்கி வரும். தறப்பாளைப் போட்டு அதற்கு மேல் துணிபோட்டு  குழந்தைகளைப் படுக்க வைத்த குடும்பங்கள் எத்தனை?  என் அண்ணாவின் நான்கு பிள்ளைகளும் குளிர்கிறது என்று சொல்லிக் கொண்டே தண்ணீரின் மேல் போட்ட தறப்பாளில் படுப்பார்கள். இவ்வாறு கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த குடும்பங்கள்தான் எத்தனைஇக்குடும்பங்கள் வாழ்ந்த பதுங்கு குழிகள் மேல் குண்டுகள்  விழுந்து குடும்பமே இறந்தால் யார் இருப்பார்?  அவர்களோடு யார் நிற்பார்;கள்மீறி நிற்பவர்களின் உயிர்களுக்கு அடுத்த கணம் உத்தரவாதம் இல்லை. இத்தனை குண்டு மழையிலும் விடுதலைப்புலிகள் பதுங்கு குழிகளுடன் இறந்தவர்களை மூடிப் புதைத்துவிட்டு வந்த சம்பவங்கள் எத்தனை?

மீண்டும் இடம் பெயர்ந்து பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் இருந்தோம். பக்கத்தில் சிறுகுளம். இதில்தான் எல்லோரும் குளிப்பார்கள்மாடுகள் பகலில் தண்ணீர் குடிப்பதும்  இதில்தான். நான் இரவுநேரம் குளிப்பது வழமை.  மறுநாள் 2009 ஜனவரி மாதம் இரவூ 7.30 இருக்கும்.  ஒரு பாரிய சத்தம் கேட்டது. அதன் பின்பு பல தடவை வெடிக்கும் சத்தம் கேட்டது. வானத்தில் வெளிச்சம். மனங்களில் குழப்பம். விடியலில் ஆவலாக செய்திகள் கேட்பது வழமை. நாட்குறிப்பு எழுதுவதும் வழமை. நேற்று இரவு வெடித்த குண்டு கொத்துக்குண்டாம். பலரது வாய்களிலும் அதுவே பெரிய கதையாக இருந்தது.

வானம் இருண்ட நிலை. மௌனமாக இருக்கும் மரங்களில் பறவைகளின் சத்தம் பலவகை. இதனூடே கிபிர் வரும் சத்தம் பதுங்கு குழியை நோக்கி எல்லோரையும் பாயவைத்தது. கிபிரின் இரைச்சல் நெஞ்சு வெடிக்கும் அளவுக்கு இருந்தது. நான்கு கிபிர்களும் ஒரே நேரத்தில் விடுதலைப்புலிகளின் பயிற்சிப் பாசறைக்கும் பெற்றோல் சேமித்து வைக்கும் இடத்திலும் குண்டுகள் போட்டன. சற்றுநேரம் மௌனம். மீண்டும் அழுகுரல்கள். காயப்பட்ட நிலையில் பிள்ளைகள் ஓடிவந்தார்கள். இதன்போது காயப்பட்டவர்கள் பலர், இறந்தவர்களும் பலர். என்னுடைய இடத்திற்கும் மூன்று பெண் பிள்ளைகள் ஒடி வந்தார்கள். என்னிடம் இருந்த மருந்துகளைக் கொண்டு காயங்களைக் கட்டினேன். அவர்களின்  குடும்ப விபரங்கள் திரட்டி மீண்டும் அவர்களை அவர்களுடைய குடும்பத்துடன் இணைத்துவிட்ட மன நெகிழ்வுடன் தூங்கினேன்.

எங்களுடைய ஊர்கள் முழுமையாகவே யுத்த பிரதேசமாக மாறிப்போய் இருந்தன. விடுதலைப்போர் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து 1988இல் இந்திய இராணுவம் வந்த போதும் ஊரை விட்டு ஓடிய எமது குடும்பம் இன்றுவரையும் ஓடுவது மீண்டும் வாழிடம் வருவோம் என்ற நம்பிக்கையில் தான். ஆனால், இம்முறை எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் சாவின் விளிம்பில் நிற்பதான உணர்வு.  எமது போராட்டம் என்னவாகும் என்ற கேள்வி. மக்கள் வகை தொகையின்றி அழிவதைச் சர்வதேசம் இப்படிப் பாத்துக்கொண்டிருக்காது, எம்மைக்கைவிடாது என்று நம்பிக்கொண்டிருந்தவர் பலர்.

இராணுவம் தமது பாதுகாப்பு வலயம் என அறிவித்த இடங்களான மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம் என என்தேசமே இருண்டு போன அவல நிலை. இரத்தம், தசைப்பிண்டங்கள் பிணக்குவியல்கள். வெறுத்துப்போன கசப்பான பயணங்கள். பயணங்கள் பழகிப்போனதும் பசிக்காக அழுவதா அல்லது எம் பிள்ளைகளின் உயிரை எப்படிக் காப்பது என நடப்பதா அல்லது இறந்துபோன உறவுகளுக்காக அழுவதா அல்லது இதற்குப்பின் தமிழரின் நிலை என்னவென்று அழுவதாநடக்க சக்தியற்றவர்களாக நடக்கிறோம். கந்தகப்புகையில் கறுப்பாகவே தெரிந்தது என்தேசமும் கூடத்தான்.

பதுங்குகுழி அமைப்பதும்;; மூன்று தடிகள் வைத்துக் கொட்டில் போடுவதும் வழமையாகிப்போக மீண்டும் பொக்கணையில் குடியேறினோம்.   மாலை 3 மணி இருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக பிள்ளையார் கோயிலைச்சுற்றி குண்டுகள் விழுந்து வெடித்தன. சதைத்துண்டங்கள், தலை, ஈரல்  என உடற்பாகங்கள் ஆங்காங்கே வேலிகளில் தொங்கின. இதைப்பார்த்த சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டார்கள். பல உடல்கள் சிதறியும்  காயப்பட்ட நிலையிலும் இருந்தன. மாத்தளன் வைத்தியசாலையில் இறந்த உடல்களின்  மீது இலையான்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. குண்டுகள் பொழிந்து மாத்தளன் கடற்கரையோரத்தில்  குடும்பம் குடும்பமாக மக்கள் இறந்து கொண்டிருந்தனர்.

இராணுவ வலையமைப்பு என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் பால், மாஉருண்டை, இலைக்கஞ்சி காய்ச்சிக்கொடுத்தார்கள். அதை நான் கடந்து போவது வழமை. அன்று அங்கே குண்டு மழை பொழிந்து ஓய்ந்ததும் எழும்பிப்பார்த்தேன். பாலகர்கள்,  கர்ப்பிணித்தாய்மார்கள் ஏனைய சிறுவர்கள் எல்லாம் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் என்ன  பாவம் செய்தார்கள். கனத்த இதயத்துடன் உறவினர் ஒருவருடன் வெளிநாட்டுப்பணம் எடுத்துக்கொடுக்க வலைஞர்மடம்  சென்றபோது கொத்துக்குண்டு அடித்தார்கள்.  ஊரிலுள்ள கடவுள்களை எல்லாம் கும்பிட்டுக்கொண்டே விழுந்து படுத்தோம். பலர் இறந்திருந்தனர். என்னுடன் வந்த உறவினருக்கு சிறிதாகக காயம். வீடு திருப்பியதும் சுகயீனமுற்றிருந்த என் தந்தையை கப்பலில் அனுப்புவதற்காக கடற்கரையால் நடந்தும் ஓடியும்  பொக்கணையில் இருந்து மாத்தளன் வந்தோம்.

பிட்டு, இடியப்பம்,  தோசை இவைகளை எல்லாம்  கண்டு வாரங்களான நிலையில்பொரித்த ரொட்டியும் சுசியமும் பால் இல்லாப்பருப்புக்கறியும் எமக்கு உணவாகக்கிடைத்தன.  பிள்ளைகள் பசியில் அழுதால் 300ரூபாவிற்கு நான்கு சுண்டு அரிசி வாங்கிச் சமைக்கும் நிலையில் இருந்தோம்.  22.04.2009 அன்று கடற்கரை வழியாக நடக்க முடியாமல் நாவறண்ட நிலையில் பல மைல்கள் கடந்து பல சோதனைகள் கடந்து இராணுவத்தை வந்தடைந்தோம். இயலாத நிலையிலிருந்த என்  தாய் தந்தையை உழவு இயந்திரத்தில் ஏற்றிய இராணுவம் என்னைத் தங்களோடு நடந்து வரும்படி கூறினர். அங்கு இருந்த மக்கள் என்னையும் தங்களோடு ஏறும்படி வற்புறுத்தியமையால் கடைசியில்  என்னையும்  அவர்களுடன் ஏற்றினார்கள். இதன்போதும் பின்னர் இன்னொரு பஸ்ஸில் ஏற்றும் போதும் இதுதான் எமது கடைசிப் பயணமென நினைத்துக் கொண்டோம்.

Photo by Kumanan K

24.04.2009 அன்று இராமநாதன் முகாமில் இறக்கினார்கள். நான் எனது தாயையும் தந்தையையும் மகளையும் பிரிந்த நிலையில் அயலவருடன் ஒரு தறப்பாள் கூட்டுக்குள் இருந்தேன். நான்கு நாட்கள் குளிக்காமல் இருந்து பின்னர் அருகிலிருந்த ஆற்றுக்குக்குளிக்கச்சென்று இராணுவம் படம் எடுக்க குளித்த பாதி குளிக்காத பாதியாக  திரும்பி வந்த நினைவுகளும் நான் இருக்கும் இடத்தை இராணுவம் கேட்க  பொய் சொல்லித்தப்பிய நினைவுகளும் குழாயில் பத்து லீற்றர் தண்ணீர் அடித்து இரவு 1 மணிக்கு குளித்த நினைவுகளும் என்றும் மாறாதது.  ஆற்றில் குளிக்கச் சென்று காணாமல் போன பல பெண்களுக்கு என்ன ஆனது உறவைப்பிரிந்து, சொத்தை இழந்து, நாம் நேசித்த நாட்டை இழந்து, போராளிகளை இழந்து, பல்லாயிரக்கணக்கான மாவீரச்செல்வங்களை இழந்து செய்த முப்பது வருடப்போராட்டம் ஏன் இப்படி ஆனது உலகநாடுகள் ஏன் எம்மை இந்த நிலைக்குக்கொண்டு வந்தார்கள்?;  உணவுக்கு வரிசையில் நின்று கடைசியில்  உணவு கிடைத்தாலும் உண்ணமுடியாத நிலை. கனத்த நெஞ்சுடன் தூக்கி எறிந்துவிட்டுப் படுத்த நாட்கள் பல.

கடைசியில், உறவு இணைப்புத் திட்டத்தில் அருணாசலம் முகாமிற்குச் சென்றபோது அங்கிருந்த மற்ற இனத்தவர்கள் சிரித்துக்கொண்டும் இனிப்புக்களைப் பகிர்ந்தும் எமது தோல்வியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். முள்ளிவாய்க்காலுடன் இனப்படுகொலை முடிந்திருக்குமென பெருமூச்சுவிட்டதொரு கூட்டம். நடந்திருக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் நல்ல தலைவனுக்கு இப்படி நடந்ததா என ஏங்கித்தவித்த ஒரு கூட்டம். உண்மைகளை யாரை நம்பிக் கதைப்பது? துன்பங்களை எப்படிப் பகிர்வது? முட்கம்பிவேலிக்குள் பூட்டி வைத்து வேடிக்கை பார்க்கும் சிங்கள வலைக்குள் சிக்கிய கிளிகளாக நம்வாழ்வு. மேலும் வலி சேர்க்கும் இராணுவத்தினரின் ஏளனம். உறவுகளை ஒப்படைக்கிறோம் என்று கூறி ஏற்றிச் சென்ற மக்களை இன்னும் காணவில்லை என்ற ஏக்கம் ஒருபக்கம். பல்வேறு சித்திரவதைகள் தாண்டி 2010இல் முகாம்களை விட்டு மீள்குடியேறி வந்தோம். வெறுமையான வாழ்வு. எல்லாமே தொலைத்த ஏக்கம். வீதிகளில் விடுதலைப் புலிகளைப் பார்த்துப் பழகிய கண்கள் எம்மை அழித்தவர்களைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்.

மீள்குடியேறி வந்த எம்மை மீண்டும் விசாரணைகள் செய்வதும் வீட்டிற்கு வருவதும் படம் எடுத்து செல்வதுமாக நாட்கள் நகர்ந்தன. இவற்றையெல்லாம் நான்கு பேராகக் கூடிப் பேச முடியாத நிலை. நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆகின. பல்வேறு வெளிநாட்டு நபர்களை இரகசியமாகச் சந்தித்து  எமது கதைகளைக் கூறி அழுதோம் கதறினோம். போர் நடக்கும்போதும் போகவேண்டாம் என்று இவர்களை நோக்கித்தான் அழுதோம். போர் முடிந்த பின்னும் இப்போதும் இவர்களை நோக்கித்தான் அழுகிறோம்.  ஏமாற்றங்களுக்குப் பதிலாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடத்தொடங்கினோம்.

இன்று இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் போராட்டங்கள் தொடர்கின்றன. வீதிகளில் தமது சொந்தங்கள் திரும்பி வருவார்கள் என காத்துக்கிடக்கும் மனைவிகள், தாய்மார், உறவினர்கள். இவர்களுக்கு ஒரு முடிவு சொல்லத் திராணியற்று அரச பதவிகளில் உட்கார்ந்து இருப்பவர்கள் பத்து ஆண்டுகள் கழிந்தும் என்ன செய்தார்கள்?   யாரை ஏமாற்ற நிலைமாறுகால நீதி?  சர்வதேசத்தை திசை திருப்ப உருவாக்கப்பட்ட அலுவலங்களில் உண்மைக்கும் நீதிக்கும் இடமில்லை என்பது தெளிவு. பணத்திற்குத் பதவிக்கும் உண்மைத்தன்மையற்ற நல்லிணக்க நிகழ்ச்சி நிரல்களுக்கும் விலைபோகின்றவர்களுக்கு உண்மையையும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் கேட்பவர்கள் புதிய எதிரிகளாகத் தெரிகிறோம். ஆனால் ஆயிரம் இறப்புக்கள் கண்டு பல இடப்பெயர்வுகளைத் தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக்கொண்டு கொத்துக்கொத்தாக எம்மைக் கொன்றவர்களுக்கு மத்தியில் அவர்களது வெற்றிச் சின்னங்களுக்கு மத்தியில் அழியாத வேதனைகளுடன் வாழும் நிலையை இன்னும் எப்படி விளக்குவது.

இப்படி இருக்க ஆயூதப் போராட்டம் மௌனித்த பின் உரிமைப் போராட்டத்தை வைத்து  அரசியல் செய்யும் கட்சிகள் பல. பத்து வருடங்கள் கழிந்த பின்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. எப்போது இவர்களெல்லாம் ஒன்றாக நின்று தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கப் போகிறார்கள் பத்தாண்டுகளின் முன் ஒரு தலைவர் பொருத்தமான கட்டமைப்புக்களை உருவாக்கிக்கொண்டு தமிழ் மக்களை சரியாக வழி நடத்திச் சென்றார். காட்டிக் கொடுத்தவர்களினாலும் வெளிநாட்டுத் தலையீடுகளாலும் உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டம் இறந்து போய்விட்டாலும் வெவ்வேறு வடிவங்களிலான வன்முறையற்ற எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சுகந்தினி. தெ,

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்க அங்கத்தவர்